தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியான ரக்ஷிகா ராஜ்!

சென்னை: இந்தியாவில் முதல் திருநங்கை செவிலியாக ரக்ஷிகா ராஜின் பெயர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

transgender rashika raj

By

Published : Oct 25, 2019, 10:10 PM IST

Updated : Oct 25, 2019, 11:14 PM IST

திருநங்கை ரக்ஷிகா ராஜ் செவிலி படிப்பை முடித்த பிறகு தமிழ்நாடு செவிலி கவுன்சிலில் தன்னை மூன்றாம் பாலின பெண் என பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. திருநங்கைகளுக்கென்று செவிலியர் கவுன்சிலில் இடம் இல்லாததால் அவரால் செவிலி பணியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டது.

ரக்ஷிகா ராஜின் விண்ணப்ப பதிவு

செவிலியர் கவுன்சிலில் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "திருநங்கை ரக்ஷிகா ராஜ் கோரிக்கையை ஏற்று அவரை மூன்றாம் பாலின பெண்ணாக செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ளலாம். இந்தத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும்" என்று உத்தரவிட்டது.

எங்களையும் மனிதர்களாய் பாருங்க

ரக்ஷிகா ராஜின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு, இந்தியாவில் முதல் முறையாக செவிலியர் கவுன்சிலில் திருநங்கை என்று குறிப்பிட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். இந்தச் செய்தி சக திருநங்கைகளிடையே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ரக்ஷிகா ராஜ் போன்று பலரும் படித்து முன்னேற முயற்சித்துவருகின்றனர்.

திருநங்கை ரக்ஷிகா ராஜ் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "2018ஆம் ஆண்டில் செவிலி படிப்பை முடித்தேன். மார்ச் மாதம் பதிவு செய்ய தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலுக்கு வந்தபோது திருநங்கைகளுக்கான தனி படிவம் இல்லை. இது குறித்து நான் பதிவாளரிடம் கேட்டபோது எங்களுக்கு இது தொடர்பாக மசோதா இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் என்னை பெண் என்று சேர்த்துக்கொள்ள கூறினார். ஆனால், எனக்கு என் அடையாளத்தை விட்டுக்கொடுக்க விருப்பமில்லை. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினேன். அதன்படி அக்டோபர் 17ஆம் தேதி நீதிபதி என்னை தற்காலிகமாகப் பெண் என்பதற்குள் திருநங்கை என்று பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் தற்போது செவிலியர் கவுன்சிலில் திருநங்கை என்று பதிவு செய்துள்ளேன். திருநங்கைகள் பலர் பலவற்றிற்காக போராடுகிறார்கள். அதற்கான வழியை நீங்கள்தான் காட்ட வேண்டும். எனக்கு தற்போது பாதி மகிழ்ச்சிதான். ஏனென்றால் அந்த மசோதா முழுமையாக வர வேண்டும்.

அதில் எங்களுக்கு இடஒதுக்கீடு போன்றவை வழங்க வேண்டும். சேர்க்கைப் படிவம் முதல் பணியில் சேரும்வரை திருநங்கைகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திருநங்கை ரக்ஷிகா ராஜ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Last Updated : Oct 25, 2019, 11:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details