தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைநிலை ஆசிரியர் மனமொத்த மாறுதலுக்கான விண்ணப்பம்: அறிவித்தது தொடக்கக் கல்வித்துறை - சென்னை மாவட்டச் செய்திகள்

தொடக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மனமாெத்த மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தொடக்கக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் பெற விண்ணப்பித்திற்கான அறிவிப்பு
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் பெற விண்ணப்பித்திற்கான அறிவிப்பு

By

Published : Jun 13, 2023, 7:52 PM IST

சென்னை:தொடக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மனமாெத்த மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், 30 ஆம் தேதிக்குள் பணியிட மாறுதல் வழங்கப்படும் என்றும் தொடக்கக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுத்தோறும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் நடப்பாண்டில் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. அதில் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வும் நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது.

வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வின் மூலம் தொடக்கக் கல்வித் துறையில் 424 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், 1111தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், தொடக்கப் பள்ளிகளில் பணி புரியும் 1777 இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்ளும் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தொடக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மனமாெத்த மாறுதல் மூலம் பணியிட மாறுதல் வரும் 30 ஆம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,“தொடக்கக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தாெடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம்.

மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலகத்தில் ஜூன் 13 ஆம் தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரையில் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் 22 ஆம் தேதி ஒப்படைக்க வேண்டும். பின்னர் அதனை மாவட்டக்கல்வி அலுவலர்கள் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்து, கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் ஜூன் 26ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அரசாணையின் படி மனமாெத்த மாறுதல் பெறுவதற்கான விதிகளை நிறைவு செய்யும் ஆசிரியர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். விண்ணப்பம் செய்யும் ஆசிரியர்கள் விதிமுறைகளை நிறைவு செய்கின்றனரா? என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் இரு ஆசிரியர்களுக்கும் விண்ணப்பத்தை பெற்றதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்.

மேலும் விண்ணப்பங்கள் குறித்த பதிவேட்டை பராமரிப்பதுடன், விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதையும் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான விதிகளை சுட்டிக்காட்டி தொடர்புடைய ஆசிரியர்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் பணியிட மாறுதல் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"NEET தேர்வை விட NExT தேர்வு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்" பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details