சென்னை:பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணி இடமாறுதல் அறிவிக்கப்பட்டது. இப்பொழுது அதனை எதிர்த்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்கக் கூடாது எனச் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் தவிர, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிடம் மாறுதல் கலந்தாய்வும் மற்றும் தொடக்கப்பள்ளி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டன.
அதேபோல் பள்ளிக் கல்வித்துறையில், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக்கூடாது எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.
அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியருக்கான பணிகள் காலியாக இருக்கும் காரணத்தால், கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக்கோரி அரசுக்குக் கோரிக்கை எழுந்துள்ளது.