சென்னை:அரசுப் பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு, அவர்களே பயிற்சி பெற்றுத் தயாராக வேண்டும் என பள்ளிக் கல்வித் துறையின் ஆணையர் கூறியதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் பதிவு ஒன்றை வெளியிட்டு தன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
வருத்தம் அளிக்கும் ஆணையரின் சுற்றறிக்கை
அதில் அவர் கூறியதாவது, "தமிழ்நாடு அரசுப்பள்ளி துறையினுடைய ஆணையர், கடந்த 16ஆம் தேதி அன்று, தலைமைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளவேண்டும் என்றால், அவர்களே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு இன்னும் விலக்கு பெறவில்லை, நீட் தேர்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, மருத்துவ கல்வியில் வழங்கி இருக்கிறோம். அது தற்போது நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, அதாவது நீட் தேர்விற்கான பயிற்சியை வழங்காவிட்டால், அவை மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும்.
இட ஒதுக்கீடு
மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு பொருளற்று போகக்கூடிய சூழல்கூட ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக தொடர்ந்து பயிற்சி மையங்களை நடத்திட வேண்டும்.
முன்னதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் பயிற்சி மையங்கள் தொடர்ந்து பயிற்சி வழங்க வேண்டும் எனப் பலமுறை கூறியுள்ளார்.
அதே போன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
மருத்துவப் படிப்புக்கு நீட் அவசியமாக்கப்பட்டுள்ளது
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையிலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ’எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம்’ போன்ற கல்வி நிறுவனங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கும், மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவோம் எனவும், அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி மையங்களை உருவாக்குவோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களைத் தவிர, எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், ஆல் இந்தியா கோட்டா, ராணுவ மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கும், அதில் இருக்கக்கூடிய 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களுக்கும், பல் மருத்துவப் படிப்புகளுக்கும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால் தான் சேர முடியும்.
அதே போல், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் உள்ளிட்ட படிப்புகளில் சேர வேண்டும் என்றாலும், நீட் தேர்வில் வெற்றி பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி
இதையடுத்து, தமிழ்நாட்டில் மதுரையிலும், கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை தொடங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்கள் நீட்டிலிருந்து விலக்கு பெற்றாலும்கூட நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு அரசே பயிற்சி அளிக்க வேண்டும்.
”போட்டித் தேர்வு பயிற்சிகளை அரசுப் பள்ளி மாணவர்கள், அவர்களாகவே மேற்கொள்ள வேண்டும்," என்பது, அரசுப் பள்ளி மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறக்கப்படுமா; இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்