சென்னை:பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் குடும்பங்களுக்குப் போர்வை மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “நாடாளுமன்றத்தில் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் விதமாக ஒரே நேரத்தில் 143 எம்.பி-களை இடைநீக்கம் செய்துள்ளனர், இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட நாட்டின் அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு 143 எம்.பிக்களை இடைநீக்கம் செய்து விட்டு, மூன்று மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது.
இதுபோல் வேலையை நாடாளுமன்றத் தேர்தல் வரை செய்வார்கள், இதற்கான தக்க பதிலடியை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள். தமிழகத்தில் அடுத்து அடுத்து புயல் கனமழை என வரலாறு காணாத அளவு 115 செ.மீ மழை பெய்து உள்ளது. நேற்று முன் தினம் (டிச.19) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியைச் சந்தித்து 8 மாவட்ட வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூபாய் 7 ஆயிரத்து 33 கோடி கேட்டுள்ளார். மேலும், உடனடி நிவாரண நிதியாக ரூபாய் 2 ஆயிரம் கோடியும் கேட்டு உள்ளார்.