சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு, கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. அப்போது விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாக ஜூலை 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு, அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதியை மாற்றி, சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாள்கள் அவகாசத்தை நீட்டித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 22 ஆம் தேதி வெளியானது.
எனவே பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜூலை 27-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இருப்பினும் அடுத்த இரண்டு நாட்களுக்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.