சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை உட்பட வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் பல குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. வருடந்தோறும் சென்னையில் பருவமழையின் போது தண்ணீர் தேங்குவதும், அதனை தற்காலிகமாக சரி செய்வதுமே வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் இறுதியில் கரையை கடந்த மிக்ஜாம் புயல் சென்னையில் வழக்கத்தை விட அதிக கனமழையை பதிவு செய்தது. இதன் விளைவாக சென்னை பெருநகரமே வெள்ளக் காடாக மாறியது. வெள்ளம் சுழ்ந்த சில நாட்களில் மழை நீர் வடிந்தாலும், இன்னும் சில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில், நாளை (டிச.08) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல பள்ளி வளாகங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருவதாலும், இன்னும் சில பகுதி மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வருவதாலும், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாக்காக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்காக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.8 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மழை வெள்ளத்தில் தந்தையைத் தேடிச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு.. சென்னையில் நிகழ்ந்த சோகம்!