தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விண்ணைத் தொடும் தக்காளி விலை; ரூ.110 வரை விற்பனை பொதுமக்கள் அவதி! - சென்னை மாவட்ட செய்தி

கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை ரூ.100க்கு விற்பனை செய்யப்படுதால் சில்லறை கடைகளில் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 27, 2023, 12:36 PM IST

சென்னை:கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதால் சில்லறை கடைகளில் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு ஒரு நாளுக்கு 1300 டன் தக்காளி தேவைப்படும் நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 370 டன் தக்காளி தான் விற்பனைக்கு வருகிறது. கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கு மேல் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

கர்நாடகா பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக தக்காளி கொள்முதல் பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக இந்த காலகட்டங்களில் தக்காளி விலை உயர்வது இயல்பு தான். ஆனால், காலநிலை மாற்றத்தின் காரணமாக தக்காளி வாங்கி சேமித்து வைப்பதற்கான சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும், சேமித்து வைப்பதற்கு தனியாக அரசு கிடங்கு இல்லாததாலும், தனியாரில் அதிக விலை கேட்பதாலும் தக்காளி சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது.

கடந்த வாரம் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் ரூ.40க்கு விற்கப்பட்ட தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் குளிர்பதனக் கிடங்கு இல்லாததால், குறைந்த அளவில் காய்கறிகள் வரவழைக்கப்படுகிறது. இதனால், தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு மொத்தச்சந்தையில் 80 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி, வெளி மொத்தச் சந்தையில் 85 முதல் 90 ரூபாய் வரையும், சில்லறை விற்பனைக் கடைகளில் 110 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்கு இந்த நிலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், கோயம்பேடு காய்கறிச் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், மழை குறைந்தால் இன்னும் ஒரு சில நாட்களில் தக்காளியின் வரத்து அதிகரித்து விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தக்காளியின் உயர்விற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பாமக தலைவர் அன்புமணி, “தக்காளி விலை 120 ரூபாயை கடந்துள்ளது. காய்கறி விலையை குறைக்க வேண்டும், சீரான விலையை உறுதி செய்ய தொலைநோக்கு திட்டம் தேவை. உழவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்வதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதே போன்று, கோயம்பேடு மார்கெட்டில் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சின்ன வெங்காயம் ரூ.80க்கும், பச்சை மிளகாய் ரூ.80க்கும், குடைமிளகாய் ரூ.140க்கும், அவரைக்காய் ரூ. 60க்கும், கொத்தவரை ரூ.60க்கும், கத்திரிக்காய் ரூ.60க்கும், பீன்ஸ் ரூ.100க்கும் இஞ்சி ரூ.190க்கும், பச்சை பட்டாணி ரூ. 90க்கும், வெண்டைக்காய் ரூ. 60க்கும், முள்ளங்கி ரூ.40க்கும், மரவள்ளிக் கிழங்கு ரூ.67க்கும், சேப்பங்கிழங்கு ரூ. 50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: கவனிப்பாரற்று இருள் சூழ்ந்து கிடக்கும் அம்மா உணவகங்களை சீரமைக்க வேண்டும்... ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details