சென்னை: ஆந்திரா மற்றும் கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளி விலை தங்கம் விலைபோல் நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 200 ரூபாயைக் கடந்து நிற்கிறது.
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் சுமார் 470 லோடு காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன.
அதில் முக்கியமாகக் கொண்டுவரப்படுவது தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவை. இதில் தக்காளி மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 டன் விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் நிலையில் தற்போது வெறும் 400 டன் தக்காளி மட்டுமே கொண்டுவரப்படுகின்றன. இதனால் தக்காளி விலை சில்லறை விற்பனையில் பங்குச் சந்தை நிலவரம் போல் தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த வாரம் தக்காளி மொத்த விலையில் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை குறைந்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், அதற்கு நேர் மாறாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இருந்தே தக்காளி விலை மெல்ல மெல்ல அதிகரித்தது. நேற்று(ஜூலை 28) கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று(ஜூலை 29) தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.