சென்னை :தமிழகத்தின் இன்று (ஆக. 31) நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக மதுரை, திண்டுக்கல், துாத்துக்குடி, திருச்சி, சேலம், உள்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக சில சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில், குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதியும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. நடப்பாண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச் சாவடிகளில் நாளை (செப்டம்பர் 1ஆம் தேதி), அதாவது இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக நடப்பாண்டுக்கான கட்டண உயர்வு 20 சுங்கச் சாவடிகளில் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரையைப் பொறுத்தவரை அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 85 ரூபாய் என்பது தற்போது 90 ரூபாயாகவும், இருமுறை சென்றுவர பழைய கட்டணம் 125 ரூபாய் என்பது 135 ரூபாயாககவும் உயர்த்தப்பட்டுள்ளது.