சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள திமுக தென்சென்னை மாவட்ட தலைமை அலுவலகத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "அரசுப் பணத்தில் சென்னை மாநகராட்சி உணவு வழங்கும் என அறிவித்துவிட்டு, அதனை அதிமுக நிர்வாகிகள் மூலம் செயல்படுத்திவருகிறது. இது ஒரு மிகப்பெரிய முறைகேடு. இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தும் தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மதுரவாயல் - சோழிங்கநல்லூர் சாலை மிக மோசமாக உள்ளபோதும், அங்கு சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்படவில்லை. மாநகராட்சி எல்லையின் உள்ளேயே ஒன்பது இடங்களில் சுங்கச்சாவடி மூலம் கட்டணம் வசூலிப்பது மக்களை சுரண்டும் செயலாகத் தெரிகிறது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் முறையிட்டபோது, அவை மாநகராட்சியின் எல்லைக்கு உள்பட்டது எனவே இதுதொடர்பான புகார்களை தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இதுதொடர்பான வாதங்களை சட்டப்பேரவையில், சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் எழுப்பியுள்ளார். இருப்பினும் தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.