சென்னை:சென்னையில் 500வது நாளாக தொடர்ந்து ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், விலையில் மாற்றமின்றி சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை என்பது சர்வதேச பொருளாதரத்தின் அடிப்படையிலும், உலக நிகழ்வுகளை பொறுத்து, கச்சா எண்ணெய் விலையில் சர்வதேச சந்தையில் நிர்ணயம் செய்யப்பட்டாலும், அதன் நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன.
இதன் உச்சமாக கடந்த 2021ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ100-ஐத் தாண்டி விற்பனையானது. பின்னர், 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டன.
அதன் பின்னர், உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையில் உள்ள கலால் வரியின் ஒரு பகுதியை மத்திய அரசு 2 முறை குறைத்தது. கடந்த ஆண்டு மே மாதம் கலால் வரியில் ரூ.9.50 எனவும், டீசல் விலையில் ரூ.7 என குறைத்தது மத்திய அரசு. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த 500 நாட்களாக அதே விலையில் நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகி வருகிறது.