சென்னை:1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, அவசர நிலை குறித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று (ஜுன் 25) பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
அந்த வகையில், சென்னை தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமையகமான கமலாயத்தில், பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின் ஶ்ரீதர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்திய சரித்திரத்தில் 47 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து அவசர நிலையை பிரகடனப்படுத்திய கருப்பு நாள், இன்று (அதாவது நேற்று). காங்கிரஸ் ஒரு தேச விரோத கட்சி. நாற்காலிக்கு வந்த நெருக்கடியை நாட்டுக்கு வந்த நெருக்கடியாக அன்று இந்திரா காந்தி மாற்றினார்.
அவசரநிலைப் பிரகடனத்தை அன்று இந்தியாவில் பலர் எதிர்த்ததாகவும் திமுக கூட அதை எதிர்த்து நின்றதாகவும் கூறுகின்றனர். ஆனால் இன்று அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார்கள். விடுதலைக்கு முன்பு இருந்தது ஸ்தாபன காங்கிரஸ், அது வேறு. இப்போது இருக்கும் காங்கிரஸ் மக்கள் விரோத காங்கிரஸ்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'சுற்றுச்சூழலை பாதிக்காத கண்டுபிடிப்புகளை மாணவர்கள் கண்டுபிடியுங்கள்' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி