சென்னை :தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 42 ஆயிரத்து 132 நபர்களுக்கு கரோனா பாதிப்பை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மேலும் புதிதாக 112 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு தொடங்கிய 2020 ஜனவரி முதல் இன்றுவரை 6 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரத்து 664 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 34 லட்சத்து 51 ஆயிரத்து 710 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர்.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஆயிரத்து 463 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உயிரிழப்பு இல்லை
மேலும் குணமடைந்த 327 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 226 என உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவரும் இறக்கவில்லை. 2020ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி ஆம் தேதி முதல் கரோனா உயிரிழப்பு பதிவான நிலையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் ஒரு உயிழப்பும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், சென்னையில் 42 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் பதின்மூன்று நபர்களுக்கும் என அதிக அளவாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் நோய்த்தொற்று ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது.
அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாகப் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இதையும் படிங்க : தந்தையால் கர்ப்பமான சிறுமி: 31 வார கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி