சென்னை:சென்னை கொடுங்கையூர் ஜம்புலிங்கம் தெருவில் ஒருவர் கழுத்தில் ரத்தக் காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின், போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கொடுங்கையூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த மோகன் பவுல்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், கொலை முயற்சி குறித்து காரணம் கேட்டபோது, தன்னிடம் சில நபர்கள் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தர மறுத்ததால் கழுத்தை அறுத்துவிட்டு தன்னிடம் இருந்த 13 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அதில், பவுல்ராஜ் இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்குச் சென்று ஒரு முட்புதரில் நின்று கொண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுவிட்டு, சிறிது தூரம் நடந்து சென்று மயங்கி விழுந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மோகன் பவுல்ராஜ் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்சோ வழக்கு கைதி தப்பி ஓட்டம் :தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் சென்னையில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமியை பல நாட்களாக அவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிறுமியின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். சுமார் 130 நாட்களுக்கு மேலாக அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்ட சிறுமியையும் கைது செய்யப்பட்ட அந்நபரையும் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.