போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மோசடி... 4 பேர் கைது:
போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தாய், மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை கந்தன்சாவடியைச் சேர்ந்த ஏ.எல்.சிதம்பரம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் தனக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தைச் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 45), பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஹேமலதா (வயது 55), அவரது மகன் ராஜசேகர் (வயது 31), கல்பாக்கம் சேகர் (வயது 55) ஆகிய 4 பேரும் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி விசாரணை பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, புகாருக்குள்ளான 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இதே போன்ற மோசடியில் எத்தனை பேர்களை ஏமாற்றி உள்ளனர் என்று விசாரணையானது நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
வீட்டை மீட்டுத் தரும்படி வயதான மூதாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்:
சென்னையில் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை பணம் தராமல், 8 மாதங்களாக வீட்டைப் பூட்டி விட்டு தலைமறைவான நபரிடம் இருந்து வீட்டை மீட்டுத் தரும்படி வயதான மூதாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் எஸ்பிஐ காலணி இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் ரத்தின சபாபதி (வயது 81), பானுமதி (வயது 71) தம்பதி. இவர்களின் வீட்டின் மேல் மாடியில் உள்ள வீட்டில் அருள்ராஜ் (வயது 55) என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து வாடகைக்குக் குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல மாதங்களாக அருள்ராஜ் வீட்டின் வாடகை பணத்தை உரிமையாளர்களிடம் தராமல் அலைக்கழித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், அருள்ராஜ் குடியிருக்கும் மேல் தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை பூட்டிவிட்டு கடந்த 8 மாதங்களாக வீட்டிற்கு வராமல் வாடகை பணத்தையும் தராமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து, வீட்டின் உரிமையாளர்களான ரத்தன சபாபதி, பானுமதி தம்பதி, தங்களது வீட்டை மீட்டு ஒப்படைக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். புகாரின் அடிப்படையில் கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள் விசாரணை செய்யும்படி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பஸ்சில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள்களை தாக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது