சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்,"தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, இயல்பை விட 35% முதல் 75% வரை கூடுதலாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிப் பரவலாக மழை பெய்து வருகிறது.
தற்போது கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர்கள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கப் பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளுக்குத் தாமதமின்றி மீட்புப் படையினை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்பகுதிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாப்பாகத் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
முகாம்களில் தங்க வைக்கப்படும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
வருவாய், நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் 1070 கட்டணமில்லாத் தொலைப்பேசி சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழையின் பிடியில் சிக்கிய வடசென்னை