சென்னை:தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் ‘நான் முதல்வன் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த ஆண்டு (2022) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில், திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் நிலையான வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். ஆனால், மத்திய அரசின் நிறுவனங்களுக்கான பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வினை, தமிழ்நாட்டில் இருந்து எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே இந்த மத்திய அரசுத் தேர்வினை எழுதி வேலை பெற முடியாது என்ற எண்ணத்தில், இளைஞர்களிடம் ஆர்வம் குறைவாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகையால், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசின் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மத்திய அரசுப் பணிகளுக்குச் செல்ல விரும்பும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் படித்து முடித்த நிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் நேரடியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.