குரூப்-1 தேர்வு: உத்தேச விடைக் குறிப்புகள் வெளியீடு!
சென்னை: குரூப்-1 தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த விடைக்குறிப்புகளில் தவறுகள் இருப்பதாகக் கூறும் தேர்வர்கள் வரும் 14 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட கேள்வி தாள்களில் உள்ள வினாக்களுக்கு சரியான விடைகள் டிக் அடிக்கப்பட்டுள்ளது. வினா எண்கள் 38 ,80, 107 மற்றும் 139 ஆகியவற்றிற்கான விடைகள் இறுதி செய்து அறிவிக்கப்படவில்லை.
விடைக் குறிப்புகள் தவறு என குறிப்பிடும் தேர்வர்கள் அதற்குரிய கேள்வித்தாள் எண்ணை பதிவு செய்து, வினா எண்ணையும் பதிவு செய்து தேர்வர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை வல்லுநர் குழு ஆய்வு செய்து இறுதி விடையினை அறிவிக்கும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் கோரிக்கையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். தபால் மூலமோ, இமெயில் மூலமும் அனுப்பும் விடை மீதான சவால்கள் ஏற்றுக்கொள்ளப்படாது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், துணை கலெக்டர் 18 பணியிடங்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 19 பணியிடங்கள், வணிகவரி உதவி ஆணையர் 10 பணியிடங்கள், துணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் 14 இடங்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் 4 பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் மாவட்ட அலுவலர் பணியிடம் ஒன்று என, 66 பணியிடங்களுக்கு கடந்தாண்டு(2020) ஜனவரி 20 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு, கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 401ஆண்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 825 பெண்களும்,11 திருநங்கைகளும் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வுகள் மாநிலம் முழுவதும் 856 மையங்களில் நடைபெற்றன.
இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 தேர்வர்கள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 264 தேர்வர்கள் பங்கேற்றனர். ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 690 தேர்வர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.