இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்வாணைய குழுமத்தின் சீரிய வழிகாட்டுதலின் அடிப்படையில், தேர்வர்கள் நலனை கருத்தில்கொண்டு தவறுகளை களைய தனது தேர்வு முறைகளில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து வந்துள்ளது. இருப்பினும் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சில தேர்வுகளில் சில விரும்பத்தகாத முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
தேர்வாணையம் நடத்திய தேர்வு நடவடிக்கைகளின் முடிவில் எந்த ஒரு நபரும் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் தொடர்பான மதிப்பெண், தரவரிசை, தேர்வு எழுதிய மையம் முதலான தகவல்களை தெரிந்துகொள்ள இயலும் என்ற வெளிப்படையான நிலையினால் தேர்வர்கள் தேர்வு நடைமுறையில் இருந்த குறைபாடுகளை தேர்வாணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனடிப்படையில் தேர்வாணையத் தலைவர் எடுத்த உறுதியான நிலைப்பாட்டினால் உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வாணையம் அனைத்து நடவடிக்கைகளிலும் தொடர்ந்து மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற உறுதிபூண்டுள்ளது.
புதிய மாற்றங்கள்
வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு முடிவுகளை தேர்வாணையம் எடுத்துள்ளது. மேலும், பல ஆக்கப்பூர்வமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க ஆவன செய்து வருகிறது. முதல்கட்டமாக தேர்வாணையம் ஆறு முடிவுகளை உடனடியாக செயல்படுத்தவுள்ளது.
தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்தவுடன் இறுதியாக பெற்ற நபர்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தொடக்கமாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் நடைமுறைகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில் தேர்ச்சி அடைந்த 181 தேர்வர்களின் விபரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை(ஓ.எம்.ஆர். மற்றும் எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள்) இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உடனடியாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும். இந்த முறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.