தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை: கிராம உதவியாளர் மற்றும் குரூப் 4 பதவிகளில் அடங்கிய 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

tnpsc

By

Published : Nov 12, 2019, 10:20 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரூப் 4 பணிக்கான எழுத்துத் தேர்வு, செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 301 வட்டத்தில் அமைக்கப்பட்ட 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், அவர்களின் தரவரிசை, அவர்கள் பெற்ற மதிப்பெண் போன்றவற்றை www.tnpsc.gov.in, www.tnpscexam.in ஆகிய இணையதள முகவரிகளில் அவர்களது பதிவெண்ணை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம். 16 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதிய தேர்வின் முடிவுகளை 72 நாளில் அனைத்து விடைகளையும் மதிப்பீடு செய்து, தர வரிசைப்படுத்தி முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இவ்வளவு குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாகும். இதற்கு முன்னர் 105 நாட்கள் தேவைப்பட்டது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலத் தேர்வாணையத்திலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் எழுதிய தேர்வு முடிவுகளை இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தி வெளியிட்டதில்லை. விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தியாவிலேயே முன்னோடியாக இருக்கிறது.

தேர்வாணையத்தின் வினாத்தாள்களில் தவறுகள் ஏதும் இருந்தால், அதனை சுட்டிக்காட்ட கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இணைப்புப் பக்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விண்ணப்பதாரர்களின் கேள்வித்தாள் குறித்த கோரிக்கைகள் மிகக் குறைந்த நாட்களில் பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

தேர்வாணையத்தின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யும் வகையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் பொதுவான தரவரிசை மற்றும் இன சுழற்சிகான தரவரிசை, சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. மேலும் யார் வேண்டுமானாலும் எந்த ஒரு விண்ணப்பதாரரின் மதிப்பெண்ணையும் அவர்களின் பதிவெண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ள முடியும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்படுவர். அவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே விபரங்கள் தெரிவிக்கப்படும். எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் பெறப்படாவிட்டால், அதற்கு தேர்வாணையம் பொறுப்பேற்காது. எனவே தேர்வாணையத்தின் இணையதளத்தினைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குரூப் - 2 தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக கூறுவது உண்மையில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details