தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TNPSC Group4: குரூப் 4 கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களுக்கு வருகிற 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

By

Published : Jul 12, 2023, 8:04 AM IST

Updated : Jul 12, 2023, 9:16 AM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் 4 தேர்விற்கான பணியில் 10,219 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கலந்தாய்வில் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் வீதம் கலந்து கொள்வதற்கான தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் குருப் 4இல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்காக 2022 ஜூலை 27ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் 2023 மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முதலில் இந்தப் பணியிடங்களில் 7,301 இடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்விற்கான விண்ணப்பம் பெறப்பட்டு, தமிழ் மாெழித்தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேர்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசால் கூடுதலாக பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதிக்கப்பட்டு, பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 என உயர்த்தப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு தமிழ்நாட்டில் 7,689 மையங்களில் 2022 ஜூலை 24ஆம் தேதி 18.36 லட்சம் பேர் எழுதினர். தேர்வில் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய 2 தாள்களை திருத்தினர். இதனால் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 2023 மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வில் தகுதி பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பதற்காக ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் பல்வேறுத் துறைகளில் பணியாற்றுவதற்கு குருப் 4 பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கேட்டதன் அடிப்படையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,219ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விபரங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் தேர்வாணைய இணையதளத்திலும் அவர்களுக்குரிய அழைப்பு கடிதம் வெளியிடப்படும். தபால் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பப்பட மாட்டாது. தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்த சான்றிதழ்களின் உண்மைத் தன்மையின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்தி இல்லை என்றால் அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வீட்டின் கொல்லை புறத்தில் தேனீ வளர்ப்பு.. மாதம் ரூ.40 ஆயிரம் லாபம் பார்க்கும் விவசாயி!

Last Updated : Jul 12, 2023, 9:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details