சென்னை:எம்பிபிஎஸ் படிப்பில் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ள புதிய மருத்துவப் பாடத்திட்டத்தின் வரைவிலிருந்து முக்கியமான படிப்புகளான நுரையீரல், அவசர சிகிச்சை, உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை நீக்கி உள்ளதை மீண்டும் சேர்க்க வேண்டும் எனத் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவப்படிப்பிற்கான புதிய வரைவுப்பாடத்திட்டத்தை ஆகஸ்ட் 16ம் தேதி வெளியிட்டது. இளநிலை மருத்துவப்படிப்பில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் முறைகள், செய்முறைத்தேர்வு, பயிற்சிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் கீர்த்தி வர்மன் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுவதாவது , “தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளனர். அதில் முக்கியமான துறையான நுரையீரல் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு ஆகிய 3 துறைகளையும் கட்டாயப் பாடம் என்பத்தில் இருந்து நீக்கி உள்ளனர். இந்தப் பாடங்கள் அவசியம் இல்லாதது என மாற்றி உள்ளனர்.
கரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளோம். பொது மக்களுக்கே நுரையீரலில் ஏற்படும் நிமோனியா பாதிப்பு குறித்துத் தெரியும் நிலையில் உள்ளனர். இந்தியாவில் காசநோய் பாதிப்பு , புகைப்பிடித்தலால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய், காசநோய், மூச்சுக்குமாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் நிமோனியா போன்ற நோய்கள் மிகவும் பொதுவானவை.