சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இனி தமிழகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் லேசான மழையானது தொடரும் என்றும், இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழைப்பதிவு:தமிழகத்தில் கடந்த 24-மணி (நண்பகல் 1- மணி வரை) நேரத்தில், புழலில்- அதிகபட்சமாக 8.செ.மீ மழைப்பதவாகி உள்ளது. இதேப்போல், சின்னக்கல்லார், ஆலந்தூர், வால்பாறை, சோழிப்போர்விளை உள்ளிட்ட பகுதிகளில் 7.செ.மீ.மழைப்பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 6.செ.மீ முதல், 1.செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று (செப்.30) இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை (அக்.01), இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையிலான நிலைப்பாடு:இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: நாளை கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேல் குறிப்பிடப்பட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கொட்டும் மழையிலும் தொடரும் போராட்டம்! 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலக்குறைவால் பாதிப்பு!