சென்னை:பெட்ரோலிய நிறுவனங்களிலிருந்து வெளியேறிய எண்ணெய் கசிவு, சென்னை பக்கிங்கம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை (கொற்றலை) ஆற்றில் பாய்ந்து நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்தது. இந்த எண்ணெய் கழிவுகளின் கசிவு எண்ணூர் பகுதி ஆற்றில் மட்டுமல்லாது எண்ணூர் பகுதி சுற்றுவட்டாரத்திலும் பரவி இருந்தது.
பக்கிங்கம் கால்வாயில் எண்ணெய் கசிவு கலந்திருந்த நிலையில், அதிக மழைப்பொழிவு காரணமாகக் கால்வாய் வழியாகச் சென்ற மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்தது. இதன் காரணமாக எண்ணூர் பகுதி மட்டுமல்லாது பக்கிங்கம் கால்வாய் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பல குடியிருப்புகளில் எண்ணெய் கழிவுகள் சூழ்ந்தன.
இந்த எண்ணெய் கழிவு சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், பாரதி நகர் என சுமார் 700க்கும் மேற்பட்ட வீடுகளிலும், 400க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளிலும் எண்ணெய் படலமாகச் சூழ்ந்தது. இதனை அடுத்து எண்ணெய் படலம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்யத் தேசிய பசுமை தீர்ப்பாயம் உயர்மட்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இந்த குழு அளிக்கின்ற ஆய்வின் அறிக்கையையும் மற்றும் அதனடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் வழங்கும் உத்தரவுகளையும் ஏற்றுத் தமிழக அரசு செயல்படும் என நேற்று (டிச.10) தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மைக் குழு இன்று (டிச.11) கூடுகிறது.