சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தலைமையிட ஏடிஜிபியாக தமிழ்நாடு அரசு பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் முக்கிய பொறுப்பாக உளவுத்துறை பார்க்கப்படுகிறது. வரும் 30ஆம் தேதி டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வுபெற உள்ள நிலையில் உளவுத்துறை ஏடிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது காவல் துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றியபோது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவங்கள் அரங்கேறியது. குறிப்பாக கள்ளக்குறிச்சி கலவரம், பிஎஃப்ஐ அமைப்பு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ ரெய்டு, கோவை குண்டுவெடிப்பு, வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல், அதிமுக கலவரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் விரைவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி!
இதில், பல சம்பவங்களில் உளவுத்துறை கோட்டை விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறையில் பொறுப்பேற்ற பிறகு ராமஜெயம் கொலை வழக்கு, கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்ற சம்பவங்களும் அரங்கேறியது. மேலும், மதுரை கமிஷ்னராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது பாஸ்போர்ட் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக சர்ச்சைகளும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டுள்ள நிலையில் உளவுத்துறை ஐஜியாக உள்ள செந்தில்வேலன் கூடுதலாக ஏடிஜிபி உளவுத்துறை பொறுப்பை கவனிப்பார் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த சங்கர் ஆவடி காவல் ஆணையராகவும், ஆவடி காவல் ஆணையராக இருந்த அருண் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பெண்கள் உடை மாற்றும் அறையில் இருந்து செல்போன்.. பிரபல துணிக்கடையில் நடந்த அதிர்ச்சி சம்ப்வம்!