சென்னை:பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யப்பட்ட தீர்மானம், புதிய நடைமுறையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கான இணையதளம் முழுமையாக தயாரானவுடன் இதனை பள்ளிக்கல்வித்துறை முறைப்படி அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் தொடர் போராட்டங்களுக்கும், மலைபோல் குவிந்திருக்கும் வழக்குகளுக்கும் அடிப்படை காரணம் மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காணாதது தான் என்பதை கண்டுபிடித்த பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளர் குமரகுருபரன், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இணையதளம் வழியாகவே குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த திட்டம் மிக விரைவில் அமலுக்கு வர உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் மதுரை கிளை நீதிமன்றங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து ஐந்தாயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, குறிப்பாக பதவி உயர்வு, சம்பள உயர்வு , பதவி உயர்வில் பணிமூப்பு கடைபிடிக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் தான் வழக்குகளை தொடுக்கின்றனர். முதலில் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்கட்ட நிலையில் உள்ள அலுவலர்கள், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவதன் காரணமாகவே ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர்.
ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு குறை தீர்ப்பு முகாம் என கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது அந்த முகாமகள் முற்றிலுமாக செயல்படாமல் உள்ளது. அப்படியே அந்த முகாம்களை நடத்தினாலும், அதில் முழுவதுமாக தீர்வு காணப்படுவதில்லை. பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளராக தற்போது பதவியேற்றுள்ள குமரகுருபரன், பள்ளிக்கல்வி துறையின் தொடர் பிரச்சனைகளுக்கான காரணங்களில் ஆய்வு மேற்கொண்டார்.