பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச் சுவற்றிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தவும், அருகில் மாணவர்கள் செல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.
மழையின் காரணமாக சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும். மேலும் மாணவர்கள் அந்த வகுப்பறையின் அருகில் செல்லாமல் கண்காணிக்கவும் வேண்டும். மின்சார இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டித்து வைத்து மின்சார பொறியாளரை தொடர்புகொண்டு பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும்.
பள்ளி வளாகத்தில் பள்ளங்கள், திறந்தவெளிக் கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் போன்றவை இருந்தால் அவைகளை மூடி வைப்பதுடன், மாணவர்கள் அதனருகில் செல்லாதவாறு அறிவுரை வழங்க வேண்டும்.
மாணவர்கள் ஏரி குளங்கள் அருகில் செல்லாதவாறு அறிவுரை வழங்குவதுடன், நீர்நிலைகள் அருகே வேடிக்கை பார்க்க செல்லக் கூடாதென பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரும் போதும் வீட்டிற்கு செல்லும் போதும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு பகுதி வழியாக வருவதை தவிர்த்திட வேண்டும். மாணவர்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பியை தொடுவதோ அதனருகில் செல்வதோ கூடாது என அறிவுரை வழங்க வேண்டும். இடி மின்னல் போன்றவற்றில் இருந்து மாணவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது.