சென்னை: கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை எனபடும் 'ராஜ் பவன்' உள்ளது. ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் பிரதான நுழைவாயில் (எண் 1) முன்பு எப்போதுமே இரும்புத் தடுப்புகள் அமைத்தும், கயிறு கட்டியும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்று பலத்த பாதுகாப்புடன் காணப்படும்.
இந்த நிலையில், நேற்று(அக்.25) மதியம் பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி நபர் ஒருவர் வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது. நபரை பிடித்துப்போது அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அவரை விசாரித்ததில், பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு ஆலோசனையை ஆளுநர் இடம் நடத்தப்பட்டது எனவும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்தும், அதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆளுநரிடம் காவல் ஆணையர் எடுத்துக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை தாக்குதல் குறித்து புகாரைப் பதிவு செய்யவில்லை என்று காவல் துறை மீது ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து ராஜ் பவன் வெளியிட்ட அறிக்கையில், "ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது" என்று ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: ஐபிசி 124 என்றால் என்ன? - ஆளுநர் மாளிகை மேற்கோள் காட்டியதற்கான காரணம் என்ன?