சென்னை: தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன அலுவலகத்தின் முன்னாள் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இயக்குனருடன் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காலையில் தயாராக இருந்தார். ஆனால், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வராததால் காலை முதல் தனது முகாம் அலுவலகத்தில் காத்திருந்தார்.
ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மாலை 5 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி உடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரின் முகாம் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், தாஸ், வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் கூறும்பொழுது, 'பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் 11 கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. முக்கிய கோரிக்கையான EMIS இணையதளத்தில் பதிவுகளை நவம்பர் 1 ஆம் தேதி முதல் செய்யத் தேவையில்லை என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இனி மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு மற்றும் பதிவு செய்தால் போதும்' என தெரிவித்தனர்.