சென்னை: அதிக வட்டி தருவதாகப் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, பல ஆயிரம் கோடி பணத்தைக் கொள்ளையடித்துத் தலைமறைவாக இருக்கும் முக்கிய நிதி நிறுவன நிர்வாகிகளைக் கைது செய்ய, இன்டர்போல் உதவியை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நாடி இருந்தனர்.
இந்த வழக்கின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு, இன்டர்போல் காவல்துறை சில வழிகாட்டுதல்களைப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு வழங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அதற்கான ஆவணங்களைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தயாரிக்கும் ஆவணங்களுடன், இன்டர்போல் காவல்துறையுடன் இணைந்து துபாய் காவல்துறையிடம் கொடுத்து, மோசடி செய்த நிதி நிறுவன நிர்வாகிகளைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தின் மோசடி சம்பந்தமாக பல்வேறு நபர்கள் துபாய் நாட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே சுரேஷ், ஹிஜாவு நிதி நிறுவன மோசடியில் தொடர்புடைய ராஜேசேகர், மகாலட்சுமி, அலெக்சாண்டர், ஜனார்த்தனன் உள்ளிட்டோரைப் பிடிப்பதற்காக ஏற்கனவே, அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக துபாய் நாட்டு அரசுக்கு, காவல்துறை தரப்பில் இந்த விவகாரம் குறித்து இரண்டு முறை கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் துபாய் நாட்டில் தலைமறைவாக இருக்கும் நிதி நிறுவன மோசடி கும்பலைப் பிடிக்க இன்டர்போல் காவல்துறை அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஏற்கனவே இரண்டு முறை துபாய் அரசுக்குக் கடிதங்கள் எழுதி அனுப்பி இருந்தாலும், அதில் முறையான விவரங்களைத் தெரிவிக்கப்படவில்லை எனவும், தற்போது, அதற்கான வழிகாட்டுதல்களை இன்டர்போல் காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களை முறையாகத் தயாரித்து, அந்த ஆவணங்களை இன்டர்போல் காவல்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும், மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருக்கும் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து அவர்கள் மோசடி செய்த பணத்தை மீட்கும் பணியில் காவல்துறை ஈடுபடும் என்று பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. பணம் பார்க்கவா போட்டித் தேர்வு? - அரசை விளாசிய டெட் ஆசிரியர்கள்!