சென்னை:குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (ஏப். 20) சட்டப்பேரவையில் நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அமைச்சர் தா.மே.அன்பரசன் பதிலுரை வழங்கி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் படி, Covid-19 பெருந்தோற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் பயனடையும் வகையில் 'தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டம்' என்ற புதிய திட்டம் ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே புத்தாக்க மனநிலை விதைத்திடும் வகையில் 1560 பள்ளிகளில் 1.5 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கடாம் புலியூரில் சுமார் 29 ஏக்கரில் ரூ.13 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், லிங்கம் பட்டியில் சுமார் 54 ஏக்கரில் ரூபாய் 25 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
கடலூர் மாவட்டம் மதவேடு கிராமத்தில் 11.41 ஏக்கரில் ரூபாய் 4.70 கோடி திட்ட மதிப்பீட்டில், ரூபாய் 3.50 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.