தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 2, 2023, 7:52 PM IST

ETV Bharat / state

"சங்கத்தை வலுப்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல" - அமைச்சருக்கு செவிலியர்கள் பதில்!

செவிலியர்கள் பணி நீக்க பிரச்னையை வைத்து சங்கம் தங்களை வலுப்படுத்திக் கொள்ள அரசியல் செய்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது வேதனை அளிப்பதாகவும், அதுபோன்ற நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

mrb
mrb

சென்னை: தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் சுபின் இன்று(ஜன.2) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கரோனா சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்க பிரச்னையை திசைதிருப்பும் விதமாக தவறான தகவலைக் கொடுத்துள்ளார்.

கரோனா காலத்தில் செவிலியர்கள் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அது முற்றிலும் தவறான செய்தி. செவிலியர்கள் எம்.ஆர்.பி தேர்வு எழுதி மதிப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுதான் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அது அவர்கள் பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணி நியமனம் செய்யப்பட்டபோது, தற்போது துறையில் இருக்கும் அதிகாரிகள் அந்த நியமனத்தை வழங்கினர். அதனால், பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருந்தால் அதை விசாரணைக்கு உட்படுத்தி முறைகேடு செய்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு.

பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மாவட்ட சுகாதாரக் குழுமத்தின் மூலமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்துவதாக தெரிவித்துள்ளார். பொதுவாக தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணி நியமனம் செய்யும்போது நிரந்தர செவிலியர்களாக பணி அமர்த்துவது இல்லை. மாறாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வின் மூலம் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு, தேசிய சுகாதார குழும பணியிடங்களில் ஒப்பந்த முறையில் பணி அமர்த்தப்பட்டு, பின்பு தமிழக அரசின் நிரந்தரப் பணியிடங்களில் பணியமத்தப்படுவது வழக்கம்.

தற்போது கரோனா சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களும் முறையாக தேர்வு எழுதி இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களை மீண்டும் மாவட்ட சுகாதாரக் குழுமத்தின் கீழ் கொண்டு வருவது எந்த விதத்திலும் முறையாகாது. பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை வழக்கமான முறைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

ஆனால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சங்கம் தங்களை வலுப்படுத்திக் கொள்ள அரசியல் செய்வதாகவும், போராட்டத்தை தூண்டுவதாகவும் பேசியுள்ளது வேதனையாக உள்ளது. சங்கத்தை வலுப்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. பொதுமக்கள் பயன்பெறும் சுகாதாரத்துறை நிரந்தரமாக அரசின் துறையாக இருக்க வேண்டும் என்பதும், அதில் பணி செய்யும் ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாக இருக்க வேண்டும் என்பதும்தான் எங்கள் நோக்கம்.

அமைச்சர் குறிப்பிடும் மாவட்ட சுகாதாரக் குழுமங்களின் மூலம் செய்யப்படும் பணி நியமங்களில் இன்று வரை எந்தவித இட ஒதுக்கீடும் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. இதுபோன்ற பணி நியமனங்கள் சமூக நீதிக்கு எதிராக உள்ளன.

அதேபோல், தற்போது நிரந்தரப் பணியிடங்கள் இல்லை எனவும், தேசிய சுகாதாரக் குழுமத்தின் கீழ் மட்டுமே பணியிடங்கள் உள்ளதாகவும், அந்தப் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகப் பணியிடங்கள்தான் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 12,000 நிரந்தரப் பணி இடங்களும், 12,000 தேசிய சுகாதார குழுமத்தின் ஒப்பந்தப் பணி இடங்களும் உள்ளன. ஒப்பந்தப் பணி இடங்களும், நிரந்தரப் பணி இடங்களும் சரிசமமாக உள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் நிறுவனமான நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மருத்துவமனைகளில் இந்திய பொது சுகாதார தர நிர்ணயங்களின் பரிந்துரைப்படி (IPHS) நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்கள் பணியிடங்கள் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறும் 48 சதவீதம் செவிலியர் பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு கல்லூரி மருத்துவமனைகளில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய செவிலியர் கவுன்சில் ஆகியவற்றின் பரிந்துரைகள்படி செவிலியர் பணியிடங்கள் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு நிரந்தர பணியிடங்களை உருவாக்கினால் இன்னும் 12,000 பணி இடங்களுக்கு மேல் உருவாக்க வேண்டிய நிலைதான் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அந்த பரிந்துரைகளின் படி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தரப் பணி இடங்களை உருவாக்கி, அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கவும், அரசு மருத்துவமனைகள் முழுமையாக அரசு துறையாக தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஒப்பந்த செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிகப் பணிதான்.. அமைச்சர் மா.சு விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details