சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பல் மருத்துவக்கல்லூரியில் 122 இடங்களும், எம்.பி.பி.எஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் 6 இடங்கள் என 128 இடங்களில் நடப்பாண்டில் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
பல் மருத்துவப் படிப்பில் 2017-18ஆம் ஆண்டில் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 804 இடங்கள் காலியாகவும், 2018-19ஆம் ஆண்டில் 677 இடங்களும், 2019-20ஆம் ஆண்டில் 705 இடங்களும், 2020-21ஆம் ஆண்டில் 637 இடங்களும், 2021-22ஆம் ஆண்டில் 570 இடங்களும், 2022-23ஆம் ஆண்டில் 557 இடங்களும் காலியாக இருந்தன.
ஆனால் 2023-24 நடப்பாண்டில் 1,950 மாணவர்கள் பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டதில் 1,828 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 122 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2023-24ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி, தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் 105 கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 14 என 600 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது.
அதில், தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 8316 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 2032 இடங்களும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட அனுமதிக்கப்பட்டது.எம்பிபிஎஸ் படிப்பிற்கான 4 சுற்றுக் கலந்தாய்வு முடிந்த பின்னர் அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இல்லை.
நிர்வாக ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 14 இடங்களும், தனியார் பல்கலைக் கழகங்களில் 4 இடங்களும் என 18 இடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில், தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான 4 சுற்றுக் கலந்தாய்வு முடிந்து, அவர்கள் சேர்வதற்கான காலக் கெடு அக்டோபர் 3ஆம் தேதி என மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே அவர்கள் அனுமதி தரும் வரையில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முடியாது என அறிவித்து இருந்தது.