உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சியில் துணை மேயர், நகராட்சிகளில் துணை தலைவர், கிராம பஞ்சாயத்துகளில் துணைத் தலைவர் போன்ற மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, சட்டம் கொண்டு வரலாம் என 2012ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கியது.
இந்த உத்தரவின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் துணை மேயர், துணைத் தலைவர் போன்ற பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் எம்எல்ஏவும், இந்திய குடியரசு கட்சி நிறுவனருமான செ.கு.தமிழரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ”தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்துகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகள் என 13 ஆயிரத்து 870 பதவிகள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதுதவிர, உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைக் குழுக்களும் உள்ளன. இக்குழுக்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை.