சென்னை: ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மதியழகனுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வீர மரணமடைந்த மதியழகனுக்கு அரசு சார்பில் மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு
20:14 June 05
வீர மரணமடைந்த மதியழகனுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ராணுவம், 17ஆவது மெட்ராஸ் படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்த, சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், வெத்தலைக்காரன் காடு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் போர் தாக்குதலால் ஜூன் 4ஆம் தேதி வீர மரணமடைந்த என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த மதியழகன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, வீர மரணமடைந்த மதியழகனின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:வெட்டுக்கிளி படையெடுப்பை வேரறுக்கும் கண்டுபிடிப்பு!