தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரி - அமைச்சர் மா.சு அறிவிப்பு சென்னை:குடும்ப நலத்துறையில் மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை, துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் தாய்-சேய் நல மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்த நிழகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்கள் தொகை பெருக்கத்தை முன்கூட்டியே கணித்த பாரதியார் 30 கோடி முகம் உடையாள் என அப்போதே பாடியுள்ளார்.
இப்போது இந்தியாவில் மக்கள் தொகை 140 கோடியை தாண்டி உள்ளது. மக்கள் தொகைக்கு இருதரப்பு வாதங்கள் இருக்கின்றன. எது எப்படியாக இருந்தாலும் சரியான அளவில் மக்கள் தொகை இருக்கும் நாடே, சுபிட்சமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்து உள்ள நிலையில், சுகாதார துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரி, அலுவலர்களை பாராட்டுவது மிக முக்கியம்.
15 ஆண்டுகளுக்கு முன்பே, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இந்த விருதுகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்ப நல திட்டங்களின் விளைவாக 2006ஆம் ஆண்டு நிலைப்படி மொத்த கருவளவு மாற்ற விகிதம் 2.1 ஆக உள்ளது. 2.1 என்பது தற்போது 1.4 என குறைந்துள்ளது. குடும்ப நலத்திட்டத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாடு 2036 ஆம் ஆண்டுக்குள் கட்டுக்குள் வரும் என இந்திய புள்ளியல்துறை தெரிவித்துள்ளது. ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளைவிட தமிழ்நாட்டில் 1.4 என குறைவாகவே உள்ளது. மொத்த கருவளவு மாற்ற விகிதம் குறைவாக இருப்பதால் தான் தமிழ்நாடு இந்தியாவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு உள்ளது. 1971களில் 31.4ஆக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 13.8ஆக குறைந்துள்ளது. 1971 களில் 14.4ஆக இருந்த இறப்பு விகிதம் 6.1ஆக குறைந்துள்ளது.
பிறப்பு விகிதம் மட்டும் அல்ல, மருத்தவத்துறையின் வளர்ச்சியால் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதத்தையும் சரியாக வைத்துள்ளோம். 2000வது ஆண்டு ஒரு லட்சத்து 120 ஆக இருந்த மகப்பேறு மரணம் 54 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மகப்பேறு மரணம் கடந்த 20 ஆண்டுகளில் 4ல் ஒரு பங்காக குறைக்கப்பட்டு உள்ளது.
1971ல் ஆயிரம் குழந்தைகளில் 113 குழந்தைகளுக்கு சிசு மரணம் இருந்த நிலையில், தற்போது அது 13என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது.1985களில் 37.8% இருந்த உயர் வரிசை பிறப்பு 2022ல் 6.7%குறைக்கப்பட்டு உள்ளது. சிறப்பாக செயலாற்றிய 12 ஆட்சித் தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதால் அவர்கள் இங்கு வரவில்லை. அவர்களுக்கு தனி விழா வைத்து விருதுகள் வழங்கப்படும்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நிரந்தரமாக குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 42 ஆயிரத்து 48 ஆகும். நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆண்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 535-ம், தற்காலிக குடும்ப நல சாதனம் ஏற்ற பெண்கள் 10 லட்சத்து 99 ஆயிரத்து 940 பேர் செய்துள்ளனர். தற்காலிக கருத்தடை ஊசி போட்டுக்கொண்டவர்கள் 1லட்சத்து 67ஆயிரத்து 216 பேர். குடும்ப நலத்துறை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது, "இந்தியாவிலேயே கருவள விகிதம் கட்டுக்குள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாடு பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலமாக சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாக உள்ளது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து இன்றுவரை 6 ஆயிரத்து 600 மேல் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு பதிவாகி உள்ளது. ஒரு நாளைக்கு 30 முதல் 40 வரை பாதிப்பு பதிவாகிறது. இது வடகிழக்கு பருவமழை பாதிப்பு இருக்கும் வரை இருக்கும்.
தமிழ்நாட்டில் ப்ளூ காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. போதிய படுக்கை வசதிகளும் உள்ளது. மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை என்பது குறித்து எந்த மருத்துவமனையிலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்து கொள்ளலாம். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மருத்துவ கட்டமைப்பை விட அனைத்திலும் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. 75 ஆயிரம் புதிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கி வாரந்தோறும் சனிக்கிழமைகளில், மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றது. கடந்த வாரம் 2ஆயிரத்து 200 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 400 முதல் 500 பேர் வரை மருத்துவ முகாம்களில் சளி பாதிப்புடன் வருகிறார்கள், அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு தமிழ்நாட்டில் புதியதாக 11 நர்சிங் கல்லூரிகள் துவங்குவதற்கு தலா 10 கோடி நிதியுதவி அளித்துள்ளது. அதற்கான கட்டமைப்புகள் செய்யும் பணிகள் துவக்கப்பட்டு, ஏற்படுத்தப்பட வேண்டும். கட்டமைப்பு பணிகள் முடிந்ததும் மாணவர் சேர்க்கை குறித்து முடிவெடுக்கப்படும். முதுகலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்து மத்திய அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்திற்கு இன்னும் பதில் அளிக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"திருச்சியில் விரைவில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படும்" - அமைச்சர் நேரு தகவல்