சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஏப்.18) சுகாதாரத் துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் ஆணையம் மூலமாக பணி நியமனம் செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் எம்ஆர்பி மூலமாக இதுவரை 4,308 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக அனைத்தும் இடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் மகப்பேறு கால இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "அதிமுக ஆட்சியில் 54 சதவீதம் மகப்பேறு இறப்புகள் இருந்த நிலையில், தற்பொழுது 52.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு இருக்கக் கூடாது என்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, அதற்கான ஆணையத்தை உருவாக்கியது திமுக அரசுதான்" என்றார்.
இதற்குப் பதில் அளித்த விஜயபாஸ்கர், "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6 ஆண்டுகள் முதலிடம் வகித்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு பின்தங்கி இருக்கிறது. முதலிடத்தினை தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்கள் பிடித்துள்ளன" என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த மா. சுப்பிரமணியன், "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் 553 உறுப்புகள் சாலை விபத்தில் உயிரிழந்தவரிடமிருந்து பெறப்பட்டு அதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இது வரலாற்றுப் பதிவாக இருக்கிறது" என்றார்.
இதற்கிடையே பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சுகாதாரத்துறை என்பது 8 கோடி பேருக்கானது. அந்த துறையைப் பற்றி பேச 15 நிமிடம் போதாது, நேரத்தை அதிகப்படுத்தித் தர வேண்டும்" என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து அம்மா மினி கிளினிக் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அம்மா மினி கிளினிக்கும் முதலமைச்சர் விரைவில் திறக்க இருக்கும் 720 மருத்துவமனைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திமுக அரசு 720 புதிய மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இதில் 500 புதிய மருத்துவ கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருத்துவ கட்டமைப்புகளுக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர் என்ற மூன்று பேர் நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால், அம்மா மினி கிளினிக் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மட்டும் 1,820 பேர் நியமிக்கப்பட்டனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "போராளி இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம்" - முதலமைச்சர் அறிவிப்பு!