சென்னை: பிஎப்.7 உருமாறிய கரோனா வைரஸ் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பரவலை எதிர்கொள்ள மருத்துவத்துறை கட்டமைப்புகளை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அவசர கால ஒத்திகைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசரகால ஒத்திகை இன்று நடத்தப்படுகிறது. கரோனா பாதிப்பு ஏற்படும்போது தேவைப்படும் மருந்துகள் கையிருப்பில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கட்டமைப்புகளுக்கும் துறையின் செயலாளர் மூலம் அறிவுறுத்தல் விடப்படுகிறது. மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்வது தொடர்பான வழிமுறைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி 24 மணி நேரத்திற்குள் துறையின் தலைமைக்கு அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் மாவட்ட எல்லைகளுக்குள் இருக்கிற தனியார் மருத்துவமனைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான மருத்துவ கட்டமைப்பு குறித்து 2 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில், நேற்று சென்னையில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், மாநிலம் முழுவதும் ஒன்பது பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.