சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் தண்ணீர் தேங்கி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. கரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தனர்.
தமிழ்நாட்டில் 19 மாதங்களுக்கு பின்னர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 4ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையும், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று 6 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை நவ.7 ஆம் தேதி முதல் தொடர்ந்து அதிகளவில் பெய்து வருவதால், தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும் 10,11 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
விடுமுறையில் ஆன்லைன் வகுப்பு
பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தாலும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (நவ.10) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "கனமழையால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்கிறது. ஏற்கனவே பள்ளிகள் சுமார் 600 நாட்கள் மூடியிருந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறந்ததும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.