சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது ," தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு, மருத்துவக் கல்வியைத் தொடர இயலாமல் தாயகம் திரும்பியுள்ள மாணவ மாணவியர் அனைவரும் மருத்துவக்கல்வியை தொடருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர், பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் நமது நாட்டிலோ, பிற வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள் ஒன்றிய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில், அவர்களது எதிர்கால மருத்துவக்கல்விக்கான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும். தரமான மருத்துவ வசதிகளை மாவட்ட அளவில் வழங்குவதற்காகவும், முக்கியத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
உலகளாவிய நோய்த்தாக்க ஆய்வின்படி, மன அழுத்தம், பதற்றம்,மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாகஉள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மனநல மருத்துவப் பயிற்சி பெற்ற மனித வளத்துடன் மனநோய் சிகிச்சைகட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது. இத்தகைய உயர்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை(IMH),தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.