தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் இதன் தாக்கம் அதிதீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பின் மையப்பகுதியாக உள்ள ராயபுரத்தில் அமைந்துள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள, குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அரசு காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகளுக்கு எவ்வாறு கரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதை தமிழ்நாடு சுகாதாரச் செயலர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இதுதொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் எம். யோகேஷ் கண்ணா இன்று ( ஜூன் 15) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், 'ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் தங்கியுள்ளனர். இதனால், யார் மூலம் கரோனா தொற்று பரவியது என்பது குறித்து கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
முதலில் காப்பகத்தில் தங்கியிருந்த சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, காப்பகத்தில் தங்கியுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 19 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நோய்த் தொற்றுக்கான அறிகுறியின்றியே காணப்பட்டனர்.
தொற்றி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தைகள் காப்பகம் முழுவதும் கிருமிநாசினிக்கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, இந்த விளக்கம் மீதான விசாரணை நாளை மறுநாள் ( ஜூன் 17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.