சென்னை:மிக்ஜாம் புயலால், தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக அதிக கன மழைப் பதிவானது. இதனால் சென்னையில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்தத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல் நியாய விலை கடைகள் மூலமாக நேரடியாகப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களைத் தொடர்ந்து தென் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு விண்ணப்ப பூர்த்தி செய்து அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.