தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நள்ளிரவு முதல் தொடங்கும் முழு ஊரடங்கு: எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

சென்னை: இன்று நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட அதன் அருகாமையில் உள்ள நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், எந்தெந்த பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

செயலகம்
செயலகம்

By

Published : Jun 18, 2020, 9:19 PM IST

அதன்படி, 19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

இருப்பினும் கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்படுகின்றன:

  1. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்.
  2. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
  3. மாநில அரசுத் துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
  4. மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.
  5. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment Zones) வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டும்.
  6. வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM), அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.
  7. பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோகத் திட்டத்திற்கு தொடர்புடைய இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மற்றும் அதைச்சார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
  8. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment Zones) செயல்பட்டு வரும் பொது விநியோகக் கடைகள் இயங்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் அக்கடைப் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.
  9. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதே போல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் சென்று, பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
  10. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.
  11. முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர் / நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.
  12. அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community kitchen ) தொடர்ந்து செயல்படும்.
  13. பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
  14. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்.
  15. நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்.
  16. மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்.
  17. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து, மேற்கண்ட 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ, அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படும். இந்த 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படமாட்டாது. எனினும், தொடர் செயல்பாடுகள் உள்ள (CONTINUE PROCESS INDUSTRIES) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் ((Industries manufacturing essential commodities) உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
  18. இந்த ஊரடங்கின் போது சரக்கு போக்குவரத்துக்குக்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.
  19. சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே
    இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.
  20. வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும், அதேபோல வெளி நாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.

21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். (அதாவது, 20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்). இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.

 104 (கட்டுப்பாட்டறை) மற்றும் 108 (அவசரகால ஊர்தி) ஆகிய சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.
 அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் மற்றும் ஆபத்து கால மருத்துவ உதவி ஆகியவற்றை சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zones), எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கும் படவேண்டும்.

அம்மா உணவகங்களில் இலவச உணவு

பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் 19 ஜுன் முதல் 30 வரை விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முழு பொதுமுடக்கத்தில் பின்பற்ற வேண்டியவை..! சென்னை காவல்துறை அறிவிப்பு!

முழு ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வங்கிகளுக்கு செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

21 மற்றும் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பால் நிலையங்கள், அமரர் ஊர்திகள் தவிர மற்ற கடைகள் மற்றும் வாகனங்கள் எதற்கும் அனுமதியில்லை எனப்பட்டுள்ளது. அதேசமயம் அவசர மருத்துவ தேவைக்கு மட்டும் பிற வாகனங்கள் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இ-பாஸ் வைத்திருப்பவர்கள் அதை பெரிய அளவில் ஜெராக்ஸ் எடுத்து காவல்துறையினருக்கு தெரியும்படி காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. போலியான இ-பாஸ் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தின்போது அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு செல்லும் மக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எந்தவித அனுமதி சீட்டுமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details