சென்னை:தமிழ்நாட்டில் பதிவுத்துறையில் பணியாற்றி வரும் சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் உள்பட அனைத்து பதிவுத்துறை அலுவலர்களும் வருகிற 25ஆம் தேதிக்குள் தங்களது சொத்து அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஒரு பத்திரப்பதிவுக்கு ஆயிரம் தொடங்கி கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பதிவாளர் அலுவலங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தற்போது பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களின் சொத்து அறிக்கை ஜூலை 25ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “ஜூலை17, 2023 அன்று சென்னை உயர் நீதிமன்றம் W.P. Nos. 2711 & 2719 of 2019 & 3177 of 2020 and W.M.P.No 3683 of 2020 Dated 17.07.2023 என்ற வழக்கில் பதிவுத்துறை தலைவர் ஆஜரானபோது சென்னை உயர் நீதிமன்றம் பதிவுத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களின் சொத்து அறிக்கையைப் பெற்று சரி பார்க்க உத்தரவிட்டதற்கு இணங்க உரிய சுற்றறிக்கை ஜூலை 17 அன்று பிறப்பிக்கப்பட்டது.