சென்னை:தமிழ்நாடு அரசு சார்பில் வரும் 15-ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற உள்ளதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
ஆனால், திட்டத்திற்காக விண்ணப்பித்த பல லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழக அரசு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் மேல்முறையீடு செய்வது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல் கட்டமாகவும், 05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவுத் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.