பொது விநியோகத் திட்ட பணியாளர்களை கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாத்தல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் கூடுதல் அறிவுரைகளுடன் கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்ரமணியம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தச் சுற்றறிக்கையில், “கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டும், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், தமிழ்நாடு அரசால் மார்ச் 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அவ்வப்போது சில தளர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பொதுமுடக்கக் காலத்தில், பொது மக்களின் இன்னல்களைப் போக்கும் வண்ணம் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திங்கள்கிழமை தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை மற்றும் எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் மாதம் திங்கள்கிழமைகளில் மாநிலத்திலுள்ள அனைத்து அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா ரொக்க நிவாரண தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்க அரசு ஆணையிட்டது.
இதேபோல் ஜூன் மாதம் திங்கள்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் அரசு உத்தரவிட்டது. மேற்குறிப்பிட்ட பணி தொடர்பாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களை சந்தித்து கீழ்க்கண்டவாறு தமது கடமையை ஆற்றி வருகின்றனர்.
1. ரூ.1,000 ரொக்க நிவாரணத் தொகை வழங்குதல்.
2. கட்டுப்பாட்டு பொருள்களுடன் கூடுதல் அரிசியையும் வழங்குதல்.
3. அரசு அறிவிப்பின்படி, சமூக விலகலை உறுதிபடுத்த ஏதுவாக டோக்கன்களை வீடுதோறும் சென்று வழங்குதல்.
4. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ரூ. 1,000 ரொக்க நிவாரணத் தொகையை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே நேரில் சென்று வழங்குதல்.
இவ்வாறு மாதத்தின் அனைத்து வேலை நாள்களிலும் தமது பணிநிமித்தமாக நூற்றுக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களை சந்தித்து, விநியோகப் பணியை மேற்கொள்வதால், கரோனா வைரஸ் தொற்றுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்பு இப்பணியாளர்களுக்கு அதிகமாக உள்ளது.
எனவே, நியாயவிலைக்கடை பணியாளர்களைத் தற்காத்து கொள்ளும் பொருட்டு அவர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதை கண்காணிக்குமாறும், அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் போதுமான கையுறை, முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவை வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறும் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் விவரம் பின்வருமாறு:
1. அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் போதுமான முகக்கவசம் , கையுறைகள், கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளதை கண்காணித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவை அந்த நியாயவிலைக் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். நிதி நெருக்கடி போன்றவை காரணமாக இவை வழங்கப்படவில்லை என்ற புகார்கள் ஏதும் எழாமல் மாற்று ஏற்பாடுகள் செய்து, அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் இவை வழங்கப்படுவதை மண்டல இணைப்பதிவாளர்கள்/இணைப்பதிவாளர் (பொது) ஆகியோர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2. ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி, மாவட்ட ஆட்சியர்/சுகாதாரத்துறை இணை இயக்குநர்/சென்னை மாநகராட்சி ஆணையர்/தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மண்டல கிடங்குகளின் பொறுப்பாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு, நியாய விலைக் கடை பணியாளர்களுக்குத் தேவையான துத்தநாகம் (Zinc), வைட்டமின் (Vitamin) அடங்கிய சத்து மாத்திரைகளையும், கபசுரக் குடிநீர் போன்ற மருந்துகளையும் பெற்று நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.