தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடல் வெப்பநிலை 37°C-க்கு மேல் இருந்தால் பொதுத்தேர்வு எழுத முடியுமா? - கோவிட்-19 பொதுத்தேர்வு

சென்னை: பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கான நிலையான இயக்க விதிமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

tn gvt
tn gvt

By

Published : Jun 7, 2020, 10:12 AM IST

Updated : Jun 7, 2020, 12:20 PM IST

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ஆம் தேதி முதலும், 11ஆம் வகுப்புத் தேர்வு 16ஆம் தேதி முதலும், 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 18ஆம் தேதி முதலும் தொடங்குகிறது.

பொதுத்தேர்வு மையங்கள் செயல்படுவதற்கான நிலையான இயக்க விதிமுறைகளை (Standard operating procedure) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வு மையத்துக்குள் நுழையும் முன்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும்; அவற்றைப் பாதுகாப்பான முறையில் விலகியிருந்து பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

37 டிகிரி செல்சியஸ் என்பதையே இயல்பான உடல் வெப்ப நிலையாகக் கருத முடியும் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு, தேர்வு பயம் காரணமாக சில மாணவர்களின் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் என்றும், அவ்வாறு உடல் வெப்ப நிலை 37.2 டிகிரி செல்சியஸுக்கும் மேல் இருந்தால், சற்று நேரத்துக்குப் பிறகு அந்த மாணவன்/ மாணவிக்கு இரண்டாவது முறையாக உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இரண்டாவது முறையும் மாணவன்/ மாணவியின் உடல் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் பட்சத்தில், அவரது உடலில், உடல் நலக்குறைவுக்கான அறிகுறி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று இயக்க விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை மாணவன்/மாணவிக்கு உடல் நலக் குறைவுக்கான அறிகுறி இருக்கும்பட்சத்தில், அவர் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அல்லது மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம்.

மாணவன்/ மாணவிக்கு கரோனா, அது தொடர்புடைய தொற்று போன்ற அறிகுறிகள் இருந்தும் (Influenza like illness) அவர்கள் தேர்வு எழுத விரும்பினால், அவர்கள் மட்டும் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ-மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், அவர்கள் வீட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட வேண்டும் எனவும்; மற்றொரு தேதியில் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் வெப்ப நிலை அதிகமாக இருந்தும், உடலில் நோய்ப் பிரச்னைகளுக்கான அறிகுறியில்லாத மாணவ-மாணவிகள் ஒன்பது பேரை, தனி அறையில் அமர வைத்து தேர்வு எழுத அனுமதிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உடல் வெப்ப நிலை அதிகம் உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனிக் கழிவறை, தண்ணீர் அருந்தும் இடங்கள் அமைக்க வேண்டும் எனவும், கூடிய வரையில் அவர்கள் மற்றவர்களுடன் கலக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த மாணவ-மாணவிகள் உள்ள தேர்வறையில் உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னை இல்லாத ஆசிரியர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அவர்கள் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுபவர்களைத் தவிர, மற்றவர்களின் உடல் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அவர்களை வீட்டுக்குத் திரும்ப அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து பொதுத்தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்காக விடுதிகள் 11ஆம் தேதி முதல் தேர்வுகள் நிறைவடையும் வரை, செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமும் இரண்டு வேளையிலும் கிருமி நாசினி கொண்டு, விடுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் எனவும்; தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : பிரியங்கா காந்தியைக் கிண்டல் செய்த உ.பி. துணை முதலமைச்சர்!

Last Updated : Jun 7, 2020, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details