சென்னை:கண்ணியமிக்க 'நாகா' இன மக்களை இழிவுபடுத்தி பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல, நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியும் வலிறுத்தியுள்ளார்.
சென்னையில் திமுக சார்பில் நேற்று(நவ.4) நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசினார். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தறபோதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நாய் கறி உண்ணும் நாகா மக்களே ஓட ஓட விரட்டியடித்ததாகவும், இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிய நிலையில், ஆளுநரை விமர்சித்துடன் நாகா இன மக்கள் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இது குறித்து இன்று (நவ.5) தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் X வலைதளப் பக்கத்தில், 'நாகா இன மக்கள் நாய் இறைச்சி உண்பவர்கள்' என மேடையில் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக ஆளுநர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனது கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "'நாகா' இன மக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது. இதனை ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே, பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ்.பாரதியை வலியுறுத்துகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், இது தொடர்பாக தனது X பதிவில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, 'நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும். வீணாய் பிறந்து வீணராய் விளங்கும் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலையை ஆணாய் பிறந்து வீணாய் போனவன் என்று பேசுவதா? நாக்கை அடக்கி பேச வேண்டும், ஆர்.எஸ்.பாரதி. பிரதமரும், எங்களின் தலைவருமான நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து பேசுவது பண்பாடாகாது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆர்.எஸ்.பாரதிக்கு எடுத்துரைக்க வேண்டும்" என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி விளக்கம்: இது குறித்து தனது X பதிவில் விளக்கமளித்த ஆர்.எஸ்.பாரதி, 'நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை கவுகாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது' என்று பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! என்ன காரணம்?