சென்னை:ஆளுநர் மாளிகையில் நடந்த 'என் மண், என் தேசம்' அமிர்த கலச யாத்திரை (தமிழ்நாடு மாநில விழா) என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்.26) கலந்து கொண்டார். மேலும், தபால் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை (CISF) சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட மண்ணை டெல்லி செல்லும் குழுவிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மண் வைக்கப்பட்ட கலசங்களை வழங்கி பேசும்போது, '2 வருடங்களுக்கு முன்பு 'என் மண், என் தேசம்' தொடங்கப்பட்டது. இதில், பங்கேற்ற தன்னார்வலர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். நாட்டின் பல மூலைகளிலிருந்தும் மண் சேகரிக்கப்பட்ட இந்த கலசங்கள் தலைநகர் செல்ல உள்ளது. நாட்டின் மண்ணை சேகரித்துப் போர் சின்னத்தில் சேர்க்கும் இந்த திட்டத்தைப் பிரதமர் தொடங்க என்ன காரணம்? ஒவ்வொரு வருடமும் குடியரசு, சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சிவகங்கையைச் சேர்ந்த மருது பாண்டியர்களை (Maruthu Pandiyar) கொண்டாடினோம். இந்தியாவில் பிரிட்டிஷுக்கு எதிராக அவர்கள் போராடினார்கள். தங்களது போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களைத் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் கொண்டாடினோம். ஆனால், அவர்கள் செய்த தியாகத்தை மறந்துவிட்டோம். நமக்குக் கிடைத்த சுதந்திரத்தைத் தாராளமாக எடுத்துக் கொண்டோம்.
1801ஆம் ஆண்டு இந்நிலத்தில்தான் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்கள் முன்பு கூட மருது சகோதரர்கள் நினைவு தினம் வந்தது. நாம் அவர்களை மறந்து விட்டோம் எத்தனை பேருக்கு நினைவு உள்ளது. ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையைச் சுதந்திரத்திற்காக இழந்துள்ளனர். சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்புகூட, மவுண்ட்பேட்டன் பிரபு போன்றவர்கள் பொறுப்பிலிருந்து உள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகும் இந்தியாவின் முக்கிய துறைகளை பிரிட்டிஷ்காரர்கள் தான் வைத்திருந்தார்கள். சுதந்திரத்துக்காகப் போராடிய ஆயிரக்கணக்கானவர்களை நாம் மறந்துவிட்டோம். 1905-இல் பிரிவினையின்போது இந்து-பெங்கால், முஸ்லிம் பெங்கால் எனப் பிரித்தபோது அனைவரும் எதிர்த்தனர்.
ஏன் அப்படிப் பிரிக்கவேண்டும். நாம் அனைவரும் ஒரே நாட்டவர் எனக் குரல் கொடுத்தனர், அந்தக் குரல் தான் நம் நாட்டின் குரல். அப்படி இருந்த நாடு இன்று பிரிவினையால் தவிக்கிறது. இதற்காகவா ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொடுத்தோம். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது (Jallianwala Bagh massacre) தமிழ்நாட்டில் போராட்டம் நடந்தது. மக்கள் தெருவுக்கு வந்து போராடினர். இதுதான் நம் நாட்டின் ஒற்றுமை. சட்டம் நமக்கான அடிப்படைக் கடமைகளைக் கொடுத்துள்ளது. இது நம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களைக் கொண்டாடிப் போற்ற வேண்டும் எனக் கூறுகிறது. சுதந்திரம் பெற்றபோது, காந்தி சோகமாக இருந்தார். பிரிட்டிஷ் நம் நாட்டிலிருந்து பார்வையில் வெளியேறினாலும், பல வகையில் நம் நாட்டுக்குள் ஊடுருவி இருக்கின்றனர்' என்று கூறினார்.
நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அந்தப் பிடியிலிருந்து விலகினால் தான், இந்தியா சுதந்திரமடைந்ததாக அர்த்தம். மதரீதியாக, சாதி ரீதியாக இன்று நாம் சண்டை போட்டுக் கொள்கிறோம். இதுதான் நமது சுதந்திர இந்தியாவா? தேசிய சுதந்திரத்திற்காகத் தமிழ்நாட்டிலிருந்து பள்ளிப் படிப்பை விட்டு விட்டு காமராஜர் (K.Kamaraj), வஉசி (V.O.Chidambaram) போன்றவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடினர். அதை நாம் நினைவு கொள்ள வேண்டும். உத்திரமேரூர் மற்றும் விழுப்புரம் சென்று கோயிலில் பார்த்தபோது 'ஜனநாயகம்' என்பது என்ன என்பதைக் குறிப்பிட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள அதையே வழிமுறையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நாம் அனைவரும் அமிர்த கலச யாத்திரையை ஒரு குடும்பமாகச் சேர்ந்து தேசப்பற்றுடன் கொண்டாட வேண்டும். நம் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துக் கொள்ளுங்கள். திருக்குறள், திருமந்திரம் என அனைத்தையும், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். நாகாலாந்து போன்ற சின்ன மாநிலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தனர் என்றார். "எந்நன்றி கொன்றார்க்கும்" என்ற திருக்குறளை இருமுறை கூறிய ஆளுநர். நம் நாடு, நம் மதிப்புகள் மூலம் உயர்ந்து வருகிறது. நாம் அதனை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். நம் பயணம் தொடரும் இது தொடக்கம் தான்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:“ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்ஐஏ-க்கு மாற்ற வேண்டும்” - வானதி சீனிவாசன்